மகேந்திர சிங் தோனி VS ஹார்திக் பாண்டியா
ஐபிஎல் தொடரின் அசைக்க முடியாத அணியான சென்னை சூப்பர் கிங்ஸுடன் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதுகிறது. கடந்த முறை, தொடரின் முதல் பாதியில் விக்கெட் கீப்பர் - பேட்டராக மட்டும் தோனி களம் இறங்கினார்; கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜா ஏற்றிருந்தார்.
இந்த ஆண்டு 'தல' தோனியே தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார். அறிமுக தொடரிலேயே குஜராத் டைட்டன்ஸ் கோப்பை வென்றதில் ஹார்திக் பாண்டியாவின் கேப்டன்சிக்கு ஒரு முக்கியப் பங்குண்டு. இந்த முறையும் பாண்டியாவின் ஆர்ப்பாட்டம் இல்லாத கேப்டன்சியை குஜராத் அணி பெரிதாக நம்பியுள்ளது.
ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வருகை, கடந்த ஆண்டு புள்ளிப் பட்டியலில் 9ம் இடத்துக்குத் தள்ளப்பட்ட சிஎஸ்கேவுக்கு ஒரு புது நம்பிக்கையை கொடுத்துள்ளது. அதே நேரம், இலங்கை மர்ம சுழலர் மஹீஷ் தீக்ஷனா தொடரின் ஆரம்பகட்ட ஆட்டங்களில் ஆட முடியாதது சிஎஸ்கேவுக்கு ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது.
இறுதிக்கட்ட ஓவர்களில் சிறப்பாக வீசக்கூடிய அதிவேகப்பந்து வீச்சாளர் ஃபெர்குசனை கேகேஆர் அணிக்கு குஜராத் 'டிரேட்' செய்துவிட்டது. ஆகவே, முகமது ஷமி - அல்ஸாரி ஜோசப் கூட்டணியை இறுதிக்கட்ட ஓவர்களில் அந்த அணி பெரிதும் நம்பியுள்ளது. வேகப்பந்து வீச்சுப் படையை பலப்படுத்தும் விதமாக ஷிவம் மாவி அணிக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.
சூப்பர் ஃபார்மில் ஷுப்மன் கில்!
இரண்டு அணிகளின் துவக்க ஆட்டக்காரர்களும் நல்ல ஃபார்மில் உள்ளனர். ருதுராஜ் கெய்க்வாட் சமீபத்தில் உள்ளூர் போட்டிகளில் சதங்களாக குவித்ததைப் பார்த்தோம். நியூசிலாந்தை சேர்ந்த ஸ்டைலிஸ் பேட்டரான கான்வே மீது சிஎஸ்கே நிர்வாகம் பெரும் நம்பிக்கை வைத்துள்ளது. அதே போல, குஜராத்தின் துவக்க ஆட்டக்காரரான ஷுப்மன் கில் தனது கிரிக்கெட் வாழ்வின் உச்சக்கட்ட ஃபார்மில் உள்ளார்.
கில் உடன் துவக்க வீரராக சாஹா களமிறங்குவதற்கு அதிக வாய்ப்புள்ளது. மேத்யூ வேட் அணியில் இடம்பிடிக்கும் பட்சத்தில் சாஹாவுக்கு பதிலாக அவர் துவக்க வீரராக களமிறங்கலாம். ஃபாப் 4-ன் ஓர் அங்கமான வில்லியம்சன் மூன்றாவது இடத்தில் இறங்கி 'ஆபத்பாந்தவன்' பணியைப் பார்க்கலாம்.
தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சனுக்கும் கூட மூன்றாம் இடத்தில் ஒரு வாய்ப்பு உள்ளது. சிஎஸ்கே வழக்கம்போல ஒரு நீண்ட பேட்டிங் வரிசையுடன் களம் இறங்குவதற்கு வாய்ப்புண்டு. பென் ஸ்டோக்ஸ், மூன்றாம் இடத்தில் விளையாடுவார். சுழற்பந்து வீச்சை திறம்பட சமாளித்து ரன் சேர்ப்பதற்கு நடு வரிசையில் மொயீன் அலியும் அம்பட்டி ராயுடுவும் உள்ளனர்.
ஆல்ரவுண்டர் ரஷீத் கான்!
டேவிட் மில்லர், முதல் போட்டியில் ஆடமாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ராகுல் தெவாத்தியா இருவரும் இறுதிக்கட்ட ஓவர்களில் பாண்டியாவுக்கு கைகொடுப்பார்கள். ஆல் ரவுண்டர் ரஷித் கான் இந்த முறை ஐபிஎல் தொடரில் தனது முழு 'ஆல் ரவுண்ட்' திறமையை வெளிப்படுத்தினால் குஜராத்துக்கு ஜாக்பாட்! தோனி எந்த இடத்தில் ஆடப் போகிறார்? தினேஷ் கார்த்திக் பாணியில் கடைசிக்கட்ட ஃபினிசர் ரோலில் அவர் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளது.
தீபக் சஹார் அணிக்குத் திரும்பியுள்ள நிலையில் சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசையின் நீளம் கூடியிருக்கிறது. ஆகவே, தோனி ஒரு 'பின்ச் ஹிட்டர்' ரோலில் களம் இறங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
இம்பாக்ட் பிளேயர் யார்?
வேகப்பந்து வீச்சில் சிஎஸ்கே அணி சற்று பலவீனமாக உள்ளது. பென் ஸ்டோக்ஸ் இப்போதைக்கு ஒரு பேட்டராக மட்டுமே அணியில் இடம்பெறுவார் என அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆகவே, வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் ஷிவம் துபே, பிரிட்டோரியஸ் இருவரும் தலா ஓரிரு ஓவர்கள் வீசுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
வாய்ப்புள்ள XI
சென்னை சூப்பர் கிங்ஸ்: டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், பென் ஸ்டோக்ஸ், அம்பட்டி ராயுடு, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, டுவைன் பிரிடோரியஸ், எம்.எஸ்.தோனி (கே & விக்), தீபக் சஹார், சிமர்ஜீத் சிங்
குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மன் கில், விருத்திமான் சஹா (விக்), கேன் வில்லியம்சன், ஹார்திக் பாண்டியா (கே), அபினவ் மனோஹர், ராகுல் தெவாதியா, ரஷித் கான், ஷிவம் மாவி, சாய் கிஷோர், முகமது ஷமி, அல்ஸாரி ஜோசப்,
துருப்புச் சீட்டு
டெவான் கான்வே, சிஎஸ்கே அணியின் முக்கியமான துருப்புச் சீட்டாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துவக்க ஆட்டக்காரராக மட்டுமில்லாமல் நடுவரிசையில் விளையாடிய அனுவவமும் அவருக்கு உள்ளது; சுழற்பந்து வீச்சுக்கு எதிராக ரிவர்ஸ் ஸ்வீப் உட்பட பலதரப்பட்ட ஸ்வீப் ஷாட்களை விளையாடும் திறமை கொண்டவர் அவர். ஆகவே, இந்த ஆட்டத்தின் கவனிக்கப்படும் பேட்டராக கான்வே மாறியுள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் முக்கிய துருப்புச் சீட்டாக அந்த அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா கருதப்படுகிறார். பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் பங்களிப்பை செலுத்தும் வீரர் அவர். குறிப்பாக மிடில் ஓவர்களில் பாண்டியாவின் பந்துவீச்சை குஜராத் அணி பெரிதும் நம்பியிருக்கிறது. சமீப காலமாக இன் ஸ்விங் பந்தையும் பாண்டியா நுட்பமாக வீசிவருகிறார். இது பவர் பிளே ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சாதகமாகப் பார்க்கப்படுகிறது.