சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் எய்டன் மார்கிரம் இல்லாத காரணத்தினால், ஏப்ரல் 2-ம் தேதி நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் புவனேஷ்வர் குமார் அணியை வழிநடத்துகிறார்.
ஐபிஎல் கோப்பை முன்பு அனைத்து கேப்டன்களும் எடுத்துக்கொண்ட புகைப்பட நிகழ்ச்சியில், சன்ரைசர்ஸ் அணி சார்பாக புவனேஷ்வர் குமாரே இன்று கலந்துகொண்டார்.
நெதர்லாந்துக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்காவில் உள்ள மார்கிரம், ஏப்ரல் 3-ம் தேதிதான் இந்தியா வருகிறார். இந்தியாவில் இந்தாண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற, தென் ஆப்பிரிக்காவுக்கு நெதர்லாந்துடனான இந்த ஒருநாள் கிரிக்கெட் தொடர் மிகவும் முக்கியமானது.
புவனேஷ்வர் குமார் இதற்கு முன்பு 2019-இல் 6 முறையும், 2022-இல் ஒருமுறையும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வழிநடத்தியுள்ளார். இதில் இரண்டு ஆட்டங்களில் மட்டுமே சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றது.
கடந்த ஐபிஎல் சீசனில் புள்ளிகள் பட்டியலில் 8-ம் இடம் பிடித்ததைத் தொடர்ந்து, சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம் நிறைய மாற்றங்களைச் செய்துள்ளது. மிக முக்கியமான குறிப்பிடத்தக்க மாற்றம், கேன் வில்லியம்சனை அணியிலிருந்து விடுவித்து, கேப்டன் பொறுப்பை மார்கிரம் வசம் ஒப்படைத்ததுதான்.
சமீபத்தில் நடந்து முடிந்த எஸ்ஏடி20 லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை சிறப்பாக வழிநடத்திய அவர், கோப்பை பெற்று தந்தார். அதுமட்டுமின்றி, இந்தப் போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில் 3-ம் இடத்திலும் அவர்தான் உள்ளார். 127 ஸ்டிரைக் ரேட்டுடன் 369 ரன்கள் எடுத்த மார்கிரம், பந்துவீச்சில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மார்கிரம் மட்டுமின்றி மார்கோ யான்சென் மற்றும் ஹெயின்ரிக் கிளாசென் ஆகியோரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முதல் ஆட்டத்தில் விளையாடப்போவதில்லை. இதனால், வெளிநாட்டு வீரர்களில் ஹாரி புரூக், கிளென் ஃபிலிப்ஸ், அடில் ரஷித், பசல்ஹக் ஃபரூக்கி மற்றும் அகீல் ஹொசைன் ஆகியோர் மட்டுமே சன்ரைசர்ஸின் முதல் ஆட்டத்தில் விளையாடத் தயாராக உள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை ஏப்ரல் 7-ம் தேதி எதிர்கொள்கிறது.